Saturday, 04 August 2018 08:47

இந்து அறநிலையத்துறையை முடக்கி கோவில் சொத்துக்களை பார்ப்பனர்கள் கைபற்றவே சிலைகடத்தல் வழக்குநாடகம்

இந்து அறநிலையத்துறையை முடக்கி கோவில் சொத்துக்களை பார்ப்பனர்கள் கைபற்றவே சிலைகடத்தல் வழக்கு நாடகம்!


7000 சிலைகள் திருடப்பட்டிருப்பது கண்டிபிடிப்பு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்டு, இவை போன்ற செய்திகளை பார்த்து, ஐ.ஜி்.பொன்.மாணிக்கவேல் நேர்மையாக செயல்படுகிறார், திருட்டில் ஈடுபட்ட பார்ப்பனர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தினர், ஆனால் நாட்கள் போக, போக ஒரு பார்ப்பன அர்ச்சகர் கூட விசாரணைக்கு கூட உட்படுத்தப்படாதது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


பொன்.மாணிக்கவேலே தனது அறிக்கையில், எந்த ஒரு சிலையும் பெயர்த்து எடுத்து கடத்தப்படவில்லை என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார், ஆக அனைத்து சிலைகளும் கருவறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பார்ப்பனர்களின் முழு ஒத்துழைப்போடு தான் நடந்துள்ளது என்பது தெளிவாகிறது.


அப்படி பார்ப்பன அர்ச்சகர்களுக்கு தெரியாமல் அந்த சிலைகள் கடத்தப்பட்டிருந்தால்,தினமும் அந்த சிலையை தொட்டு பூஜிக்கும் பார்ப்பன அர்ச்சகர்களால் மிக எளிதில் சிலை மாறியுள்ளதை உணர்ந்திருப்பார்கள்.


ஆக சிலைகளோடு நேரடியான தொடர்புடைய பார்ப்பன அர்ச்சகர்கள் தான் சிலை கடத்தல் வழக்கில் முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்களாக இருக்கும் சூழலில்,நேர்மையின் சிகரம் என்ற பின்பத்தோடு கட்டமைக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் பார்ப்பன அர்ச்சகர்களை நோக்கி விரலை கூட நீட்டாமல் இருந்தது சந்தேகத்தை கிளப்பி வந்தது.


கவிதாஅவர்களின்கைதின் மூலம் பூனைக்குட்டி வெளியேவந்தது.


அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருக்கும் கவிதா என்பவரை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அணி கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற காரணத்தை முன் வைத்து இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படும் கவிதா அவர்கள் விசாரணையின் போது இக்கருத்தை முன் வைத்துள்ளார்,


"கோவில் கர்ப்பகிரகத்திற்குள் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் செல்லவே முடியாது, அறநிலையத்துறை அதிகாரிகள் கூட கர்ப்பகிரகத்திற்குள் போக வாய்ப்பே இல்லை, அதுவும் இல்லாமல் ஒரு பெண் என்ற ரீதியில் நான் கர்ப்பகிரகத்திற்குள் செல்ல வாய்ப்பே கிடையாது, அது பார்ப்பனர்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இடம்" எனக் கூறியுள்ளார்.


அவர் முன் வைத்த கருத்துக்கள் தான் இவர்களை மிரள வைத்துள்ளது, இதோடு சேர்த்து, கவிதா அவர்கள் குறி வைக்கப்பட இனியும் பல காரணங்கள் உள்ளன.


யார் இந்த கவிதா ?


2003-2004 கால கட்டத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கான பணியிடம் பற்றிய அரசாங்கம் விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளிவந்தது, அதில் 'ஆண்கள் மட்டும்' எனக் குறிப்பிடப்பட்டு பெண்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டிருந்தது,


இதை அடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான S.துரைசாமி அவர்கள், பெண்களுக்கும் அதிகாரியாக உரிமை வேண்டும் என்ற சட்ட போராட்டத்தை நடத்தினார், அதில் வெற்றியும் கண்டு அறநிலையத்துறையில் பெண்களும் பணியாற்றும் உரிமையை பெற்றுத் தந்தார், அப்படி பெறப்பட்ட உரிமையின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி தான் இந்த கவிதா.


அவரது தந்தை திமுகவில் பொறுப்பில் இருந்தவர், மேலும் இவர் தனிப்பட்ட ரீதியில் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையும், சமூகநீதி சிந்தனையும் உடையவர் தான் என்பது தான் பார்ப்பன கும்பலின் கண்களை உறுத்திக் கொண்டே வந்துள்ளது, அந்த பல வருட பகையை தற்போது இவ்வழக்கை வாய்ப்பாக பயன்படுத்தி பழிவாங்க துடிக்கிறது பார்ப்பன கும்பல், ஒற்றை பார்ப்பன அர்ச்சகரை கூட விசாரணைக்கு உட்படுத்தி கைது செய்யாமல், திராவிட இயக்க பின்புலமுடைய கவிதா அவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து கைது செய்ததன் மூலம் இந்த  ஐ.ஜி்.பொன்.மாணிக்கவேலின் நேர்மை இங்கே பல்லிளித்து நிற்கிறது.


இவரின் இந்த அனைத்து நேர்மையற்ற செயல்பாடுகளலோடும், இவரை இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட நீதீபதி யார் என்பதையும் கணக்கில் கொண்டால், இவர் யாருக்காக இந்த வேலையை செய்கிறார் என்பதை நம்மால் கணிக்க முடியும், அந்த நீதிபதி வேறு யாருமில்லை, ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரான மகாதேவன்.


ஆக இந்த வழக்கு என்பது திருடு போன சிலைகளை மீட்க வேண்டும் என்ற அக்கறையோடு நடைபெறவில்லை, இந்த சிலை திருட்டு வழக்கை பூதாகரமாக்கி, இந்து அறநிலையத்துறை தான் இவை அனைத்திற்கும் காரணம் என்ற வாதத்தை முன் வைத்து, இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் தொடர்ந்து முன் வைக்கும் கோரிக்கையான கோவில்சொத்துகோவிலுக்கே (பார்ப்பனருக்கே) என்பதை இதற்கான தீர்வாக முன் வைத்து, கோவில் சொத்துகளை அபகரிக்க நடைபெறும் சதி வேலையாகவே தெரிகிறது.


அதற்கு முன் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள சொத்து மதிப்புகளை கொஞ்சம் ஆராய்ந்தால் இவர்களின் நோக்கம் புரியும்.


பார்ப்பனக்கூட்டம் அபகரிக்க துடிக்கும் இந்து அறநிலையத்துறையின் சொத்து_மதிப்புகள்


அன்றைய சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு 1922 இல் அறிமுகப்படுத்திய இந்து அறநிலையச் சட்டம், 1925 இல் நிறைவேற்றப்பட்டது, இந்த சட்டத்தை முன்னோடியாக வைத்து, தற்போது இயங்கும் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.


தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 திருக்கோயில்கள் உள்ளன, இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன, இந்த கோயில்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானா வாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன, அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, மேலும் அசையா சொத்து 4,78,347.94 ஏக்கர் நிலம், இத்துறையின் கீழுள்ளது.


ஆக இந்து அறநிலையத்துறை என்ற ஓர் அமைப்பு உருவாவதற்கு முன்பு இத்தனை சொத்துக்களும் யார் கட்டுப்பாட்டில் இருந்தது ?


வேறு யார், யார் 7000 சிலைகளை திருட உடந்தையாக இருந்தார்களோ, அதே ஆரிய பார்ப்பன அர்ச்சகர் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் தான்,


எனவே சிலை கடத்தல் வழக்கு சம்மந்தமாக ஒரு பார்ப்பன அர்ச்சகர் கூட கைது செய்யப்படாதது, அதற்கு பதிலாக நேர்மையான அதிகாரியான கவிதா அவர்கள் அவர்களின் கைது, இந்து அறநிலையத்துறையின் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பழி, இவை அனைத்தோடும் சேர்த்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களையும் கணக்கில் கொண்டால், இந்த வழக்கின் போக்கை நாம் புரிந்து கொள்ளலாம்.


அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை பழையபடி  பார்ப்பனக் கூட்டம் திண்று கொழுக்க, ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் வழிகாட்டுதலின்படி நடக்கும் ஓர் திட்டமிட்ட சதி செயல்.


செய்தி : மனோஜ் (த பெ தி க)


Last modified on Monday, 06 August 2018 11:20

Related Video

சிலைகடத்தல் வழக்கு நாடகம்
back to top